Sunday, 1 May 2016

பிரேமதாஸா கொல்லப்பட்ட


மே தின ஊர்வலத்தில்!


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸா கொல்லப்பட்டு இந்த மே தினத்துடன் 26 வருடங்களாகின்றன.அவர் கொல்லப்பட்ட அந்த மே தின ஊர்வலத்தில் நானும் கலந்துகொண்டு எதிர்கொண்ட அந்த திகில் சம்பவம் எனக்கு மறக்க முடியாத அனுபவமாகும்.
அப்போது சிறுவனாக இருந்த நான் கொழும்பைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரலில் பாடசாலையை விட்டோடி கொழும்பில் ஒரு வீட்டில் தஞ்சம் புகுந்தேன்.
அந்த வீட்டில் இருந்த ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸா பங்குபற்றிய அந்த மே தினத்தில் கலந்துகொள்வதற்காக என்னையும் அழைத்துச் சென்றார்.
ஜனாதிபதியைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நானும் சென்றேன்.ஆனால்,பார்க்க முடியவில்லை.பிரேமதாஸா ஆமர் வீதியை வந்தடைந்தபோது நாம் அந்த ஊர்வலத்தில் வேறொரு வீதியால் வந்துகொண்டிருந்தோம்.
அந்த நேரத்தில்தான் பிரேமதாஸாவை இலக்கு வைத்து அந்தத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.குண்டு வெடிப்புச் சத்தம் கேற்கவில்லை.அந்தளவு தொலைவில் நின்றேன்.
சீராகச் சென்றுகொண்டிருந்த அந்த ஊர்வலத்தில் திடீரென சலசலப்பு ஏற்படத் தொடங்கியது.அனைவரது முகங்களும் அதிர்ச்சியால் நிரம்பிக் காணப்பட்டன.பலர் பின்னோக்கி நகரத் தொடங்கினர்.
என்னை அழைத்துச் சென்றவரிடம் காரணத்தைக் கேற்க நடந்ததைச் சொன்னார்.இன்னும் குண்டுகள் வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தில் பலர் அங்கிருந்து நழுவத் தொடங்கினர்.
சிறு வயதில் இருந்தே யுத்த அழிவுகளை நேரடியாகப் பார்த்துப் பழகிப் போனதால் அந்தச் சம்பவம் எனக்குள் எதுவித அச்சத்தையும்
ஏற்படுத்தவில்லை.மாறாக,சம்பவ இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தையே ஏற்படுத்தியது.
பொலிஸாரினதும் இராணுவத்தினரினதும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் சம்ப இடத்தில் இருந்து மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் ஒருவாறு அந்த இடத்தை அடைந்து சிதறிக் கிடந்த உடல்களைப் பார்த்தேன்.அவற்றுள் ஜனாதிபதியின் உடல் எங்கே என்று தேடினேன்.
அங்கு சிதைந்து போய்க்கிடந்த ஓர் உடலைக் காட்டி இதுதான் பிரேமதாஸாவுடையது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர்.இராணுவத்தினரும் பொலிஸாரும் அங்கு வந்து விரட்டும் வரை அப்படியே அந்த சம்பத்தை அவதானித்துக் கொண்டு நின்றேன்.
மே தின நிகழ்வுக்காக காலி முகத் திடலில் மிகப் பிரமாண்டமான மேடை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.நான் அறிந்து ஒரு மாதத்துக்கும் மேலாக அமைக்கப்பட்டு வந்த அந்த மேடை மறு நாள் ஒரே தினத்தில் அகற்றப்பட்டது.
மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பிரேமதாஸாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் இரவு பகலாக காலி முகத் திடலில் நீண்ட வரிசையில் நின்றனர்.
அந்த வரிசை எங்கிருந்து ஆரம்பிக்கின்றது என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மிக நீளமாக இருந்தது.இரவில் எத்தனை மணிக்குப் பார்த்தாலும் அந்த வரிசை காலிமுகத் திடலின் ஊடாகச் சென்றுகொண்டே இருக்கும்.
இவ்வாறு பிரேமதாஸாவின் மரணம் முதல் அவர் தகனம் செய்யப்படும் வரையில் இடம்பெற்ற அனைத்துக் காட்சிகளும் இன்றும் எனது நினைவில் நிற்கின்றன. இது எனது வாழ்வில் மறக்க முடியாத திகில் அனுபவமாகும்.

நன்றி  -M .I .Mubarak-The Journalist 
https://www.facebook.com/MIMubarak-747992875299991/


No comments:

Post a Comment