மேற்கு வங்கத்தில் கணவன்
- மனைவி இடையிலான சாதாரண சண்டை மூலமாக மாபெரும் சிறுநீரக மோசடிச் சம்பவம் அம்பலத்திற்கு
வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிலிகுரியில் ஒரு பெண் உள்பட 9 பேரை
போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அத்தனை பேரும் சிறுநீரக திருட்டில் ஈடுபட்டு வந்த
கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சிக்கிய விதம் மிக மிக சுவாரஸ்யமானது.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களில் ஒருவர் பெயர் தேவசிஷ். இவர்
சிறுநீரகத் திருட்டுக்காக ஆட்களை நைச்சியமாக பேசி கூட்டி வரும் தரகர் ஆவார். இவர் தனது
மனைவி மோமிதாவின் சிறுநீரகம் ஒன்றை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவருக்குத் தானமாக வழங்குமாறு
கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்து விட்டார் மோமிதா.
மேலும், தனக்குப் பணமே தருவதில்லை என்றும் கூறி சண்டை போட்டுள்ளார்
மோமிதா. தனக்குப் பணம் கொடுத்தால்தான் சிறுநீரகத்தைத் தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் அதைக் கண்டு கொள்ளவில்லை தேவசிஷ். இதையடுத்து கோபமடைந்த மோமிதா போலீஸாருக்குப்
போனைப் போட்டு அத்தனையையும் அம்பலப்படுத்தி விட்டார்.
இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர். விளைவு, இன்று தேவசிஷ்,
அவரது மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கும்பலின் தலைவர் பெயர்
டி.ராஜ்குமார் ராவ் என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸார் சொல்கிறார்கள். இவருக்கு
மேற்கு வங்க மாநிலம் மட்டுமல்லாமல், கோவை, நாக்பூர், ஜலந்தர், கான்பூர் ஆகிய இடங்களிலும்
ஏஜென்டுகள் உள்ளனராம்.
இதையடுத்து அங்கு தற்போது போலீஸார் பல்வேறு இடங்களில் ரெய்டு
நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும் 10 பேருக்கு
போலீஸார் வலை வீசியுள்ளனர். இந்த விவகாரத்தில் பல டாக்டர்களும் சிக்குவார்கள் என்று
தெரிகிறது. இந்த டாக்டர்களுக்கு சட்டவிரோதமாக சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்ய பல லட்சம்
பணம் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment