Wednesday, 8 June 2016

இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்களுள் 10 வீதம் அழிவு

கொஸ்கம ஆயுதக் களஞ்சிய வெடிப்பின் காரணமாக இலங்கை இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்களுள் 10 வீதமான ஆயுதங்கள் அழிந்துவிட்டன என்று இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு,இந்தத்  தீ விபத்துக்குள்ளான களஞ்சியசாலையில் இருந்தும் 10 வீத ஆயுதங்களே எஞ்சியுள்ளன என்றும் அவற்றை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளதாகவும் மேல் மாகாணத்துக்கான கட்டளைத் தளபதி சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதோடு 47  பேர் காயமடைந்துள்ளனர்.முகாமைச் சுற்றியுள்ள மக்கள் இடம்பெயர்ந்து இப்போது மீண்டும் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.இருந்தும்,1120 பேர் இன்னும் முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை  நடத்துவதற்கான விசேட நீதிமன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு சபை இராணுவத் தளபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.இது நாசகார வேலையாக இருக்குமா என்று சட்ட,ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

 தேச விபரங்களை இப்போது மதிப்பிட முடியாது எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க,இந்தச் சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகத் கூறியுள்ளார்.அத்தோடு,தனது ஆட்சிக் காலத்தில் இந்த ஆயுதக் களஞ்சியத்தை  வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் துரித விசாரணையை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.




No comments:

Post a Comment